எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்..!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குக்கு தடைவிதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என விதி இருக்கும்பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியோ அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேநேரம் சூரியகுமார் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்றும், அவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற விதிகளின் படி பொதுச்செயலாளர் தேர்வானதாக தெரிவிக்கவில்லை என்றும், பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று கூறினார். அத்துடன் வழக்கை நிராகரிக்ககோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் நேற்று கிழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது , சூர்ய மூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை என்றும் , வழக்கு தொடர்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கில் வழக்கை நிராகரிக்ககோரிய பழனிசாமியின் மனுவுக்கு பிறபித்த உத்தரவுக்கு தடை விதித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றைக்கு சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்றும், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வாதம் முன்வைத்தனர். இதனை அடுத்து நீதிபதி அதனை ஏற்று பிறப்பித்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார் . அத்துடன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கு விசாரணை வருகிற 25-ம் தேதி விரிவாக நடைபெறும் என்றும் ஒத்தி வைத்தார்.


