ராணுவ வீரர்கள் என்ன எல்லைல சண்டையா போட்டாங்க? அவர்களுக்கு எதுக்கு பாராட்டு? - செல்லூர் ராஜூ

 
 sellur raju  sellur raju

ராணுவத்திற்கு உபகரணங்களை வாங்கி கொடுத்த பிரதமரை முதலில் பாராட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.


மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “ஒவ்வொரு இந்தியரும் பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். அனுபவம் அனுபவம் என்று சொல்கிறார்களே... வயதான அமைச்சர்களின் செயல்பாடுகளை வைத்து பிரதமர் மோடி அற்புதமான பணிகளை செய்து வருகிறார். 2 நாட்களாக தூங்காமல் கண் வழித்து ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக வீடியோ மூலமாக கவனித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் உண்மையில் பெருமைப்பட வேண்டும். திமுக சார்பில் ராணுவ வீரருக்கு பாராட்டு தெரிவிக்க ஊர்வலம் நடத்துவது நாடகம். ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களையும், தேவையான கருவிகளை கேட்டு வாங்கியது பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர்கள் தான்.

அதனை ராணுவத்திற்கு வாங்கி கொடுத்தது மத்திய அரசு. முதலில் பாராட்ட வேண்டியது பிரதமரையும் அமைச்சரையும் அதற்குள் ராணுவ வீரருக்கு பாராட்டு என திமுகவினர் நாடகமாடுகிறது. இதே முதல்வரை விடுத்து செக்ரட்டரி (தமிழக செயலாளர்கள்) அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தினால் ஏற்றுக் கொள்வார்களா.? அர்த்தம் கெட்ட தனமாக திமுகவினர் ராணுவ வீரருக்கு பாராட்டு விழா என நாடகமாடி வருகிறது. ராணுவ வீரர்கள் என்ன எல்லைல சண்டையா போட்டாங்க?! எல்லாம் பாரத பிரதமர் மோடி & அமைச்சர்களோட ஐடியா!  ராணுவ வீரர்களுக்கு எதுக்கு பாராட்டு?தொழில்நுட்பம் வாங்கிக்கொடுத்தது பாரத பிரதமர்” என்றார்.