மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமி கைது..!
மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவருக்கு அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் முன்விரோதம் மற்றும் கொலை வழக்கு காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இதன் காரணமாக, இரு தரப்பையும் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போதும் கூட இரு தரப்புக்கும் இடையோன பகையால் அவ்வப்போது கொலைகள் அரங்கேறி வருகின்றன.
இந்த சூழலில், பிரபல ரவுடியும், ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளியை, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த மாதம் அவரை போலீசார் அழைத்து சென்றனர்.
பெரம்பலூர் டோல்கேட் அருகே வந்த போது வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், வெள்ளைக்காளி உயிர் தப்பினார். போலீஸ் பாதுகாப்பில் இருந்த போதே ரவுடியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரவுடி கொட்டு ராஜா தலைமையிலான கும்பல்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசாரை தாக்க முயன்ற போது என்கவுன்ட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுரை திமுக நிர்வாகி வி.கே. குருசாமியை மங்களமேடு போலீசார் இன்று கைது செய்தனர். பிறகு குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வி.கே. குருசாமியுடன் சேர்த்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த வாரம் வி.கே. குருசாமி மதுரையில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

