மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு 'நேதாஜி' பெயர்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

 
1 1

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலப் பணிகள் தமிழக முதல்வரால் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம் மதுரை மாநகரின் வடபகுதியையும், தென்பகுதியையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்குகிறது. கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிகிறது. வைகை ஆற்றில் தற்போதைய ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலமாக அமைக்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்லூர் நோக்கி அமைய உள்ளது. பாலத்தின் கீழ் இருபுறமும் சேவை சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை மேம்பாலத்தினால் மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

Advertisement


இந்த நிலையில் பாலத்தின் ஒருபக்க கட்டுமானமான யானைக்கல் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து தமுக்கம் வரை தற்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு, பூச்சு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நீண்ட பாலங்களை அமைத்து சாதனை படைத்து வரும் நமது #DravidianModel-இல் அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளம் உள்ள 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்'. தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணாசிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு இந்திய நாட்டின் விடுதலைக்காக தனக்கென ஒரு பாதையை உருவாக்கி நமது தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21 ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.