கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் அனல் பறக்க நடக்கும் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் தமிழ்நாடு முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். இந்த அரங்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை மேலூர் தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1000 ஜல்லிக்கட்டு காளைகள், 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலாவதாக கிராமத்து மரியாதை காளைகள் அவிழ்த்து விடப்பட்டது, அதை யாரும் பிடிக்கவில்லை, அதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவ்வாறு அவிழ்க்கப்பட்டு களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவி பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், மிக்ஸி, மெத்தை, சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்க மதுரை பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வாகனங்களில் வரும் ஜல்லிக்கட்டு மாடுகளை கொண்டு வருபவர்களுக்கு முறையான அறிவிப்புகளை வழங்கி வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் காளைகளை சோதனைகள் செய்து அனுமதி அளித்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு பொது சுகாதார துறை மூலம் மருத்துவர்கள் குழு முதலுதவி சிகிச்சை வழங்கி வருகின்றனர்