சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி...மத்திய அமைச்சருக்கு நன்றி - சு.வெங்கடேசன்

 
சு வெங்கடேசன்

தனது கோரிக்கையை ஏற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) உள்நோயாளிகளல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வசதி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா அவர்களிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் அமைச்சர் ஜூலை 24 ஆம் தேதி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் இனிவரும் காலங்களில், தனியார் சித்த மருத்துவமனைகளிலும் இந்த வாய்ப்பு அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இது நவீன சித்த மருத்துவ துறைக்கும், தொன்மையான தமிழ் மரபு மருத்துவத்திற்குமான மிகப்பெரிய வெற்றி. எனது கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.