விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் - சு.வெங்கடேசன்

 
su venkatesan

ரயில்களில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்தாமல் பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி  விளம்பரத்தில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியதே இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  

odisha

இந்நிலையில், பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி  விளம்பரத்தில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியதே இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 13,200 ரயில் இன்ஜின்கள் உள்ளன. இவற்றில் வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே கவச் எந்திரம் பொறுத்தப்பட்டதாககடந்த ஆண்டு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தீவிர உணர்வோடு இந்த கருவி அனைத்து இன்ஜின்களுக்கும் பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்தது.   2022 மார்ச்சுக்கு பின் இந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும்.பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி விளம்பரத்தில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியதே இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.