"ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை" - மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

 
tn

அண்ணாமலை அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் காட்டமாக விமர்சித்துள்ளது. 

annamalai

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித்தள்ளலாமென்று பார்த்தால் அவர் பேசியது நம்மவரைப்பற்றி. ஆட்டை கடித்து, மாட்டைக்கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக்குதற முனைந்திருக்கிறார். நம்மவர் அவர்கள் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ்ஏஞ்சல் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார். நம்மவரின் லாஸ்ஏஞ்சல் பயணத்தைப்பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது. அதே அமெரிக்கவில் போய் அரசியல் பேசும் இவர் நம்மவரை கேலி செய்கிறார். தன் சம்பாத்தியத்திற்கு ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடும் நம்மவரை, அரசியலில் சம்பாதிப்பவர்கள் கேலி பேசுவது புதிதல்ல. எனவே அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்பட காட்சி ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நம்மவர் ஒரு வரலாற்று உண்மையை கூறினார்.

kamal

அதுவும் காஞ்சிப்பெரியவர் சொன்ன உண்மையை, திரு.சோ அவர்கள் ஒத்துக்கொண்ட உண்மையை, அண்மையில், இவரது கட்சியிலிருக்கும் சுப்பிரமணியசாமி வழிமொழிந்த உண்மையைத்தான் என் தலைவர் கூறினார். அதையெல்லாம் மறுக்க திராணியற்ற திரு. அண்ணாமலை, எங்கள் தலைவர் மீது பாய்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும். ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் நம்மவரை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவலதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்.