“மோடிக்கு முதல்வர் ஸ்டாலினை கண்டால் பயம்”- மல்லிகார்ஜூன கார்கே
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு நாட்டை இணைத்த போது மோடி குகைகளில் தியானம் செய்வதிலும், கங்கையில் நீராடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
ஓசூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “நாங்கள் ஜனநாயகம், நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடி வருகிறோம். ஆனால் மோடி சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான மனுமிருதி கொள்கையை அமல்படுத்த துடிக்கிறார். மோடியின் தத்துவம் பெண்களை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைப்பதே ஆகும். 2023ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் இன்னும் அமல்படுதுதவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, விலைவாசி குறைப்பு என மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன. மோடி என்றாலே பொய் என்று தான் பொருள். ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு நாட்டை இணைத்த போது மோடி குகைகளில் தியானம் செய்வதிலும், கங்கையில் நீராடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஸ்டாலினின் சித்தாந்தத்தை கண்டு மோடி பயப்படுகிறார். நாடு முழுவதும் இன்று ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் பின்னால் நிற்கிறது. மு.க.ஸ்டாலின் உங்களின் அன்புக்கு பாத்திரமானவர். அவருக்கு மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் இருந்து வருகிறார். சமூக நீதியை நிலைநாட்டுவது, சுய மரியாதையை காப்பது போன்றவற்றில் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக திகழ்கிறார். தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி நமக்கு கிடைத்துள்ளது.
மோடியை பொறுத்தவரையில் மேற்கு வங்க மாநிலம், தமிழ்நாடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்ப்பதையே செய்து வருகிறார். மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டால் பயம். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புதிய திட்டங்களுக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரையில் தொலைநோக்குடன் திட்ங்களை செய்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என பேசினார்.


