திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..!

 
1 1

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்தத் தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சென்னை வேளச்சேரி அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்த சதீஸ் (40) என்பது தெரியவந்தது. டிரைவராகப் பணியாற்றி வரும் இவர், நேற்று திருப்பூர் ரயில் நிலைய பார்சல் புக்கிங் அலுவலகம் அருகே நின்றுகொண்டிருந்தபோது போலீசாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் இந்த மிரட்டலை விடுத்தார் என்பது குறித்து ரயில்வே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.