மகளிர் விடுதியில் மனைவி வெட்டிக் கொலை - சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்!

 
1 1

நெல்லையை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (28) .இவரது கணவன் பாலமுருகன் (32).இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஸ்ரீபிரியா கோயம்புத்தூருக்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது மனைவியைப் பார்ப்பதற்காக பாலமுருகன் அவர் தங்கியிருந்த மகளிர் விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு, விடுதி வாசலில் ஸ்ரீபிரியாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்த நிலையில், பாலமுருகன் அதைப்பற்றி கவலைப்படாமல், தனது மனைவியின் சடலத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஸ்ரீபிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, பாலமுருகனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் விடுதி அருகே நிகழ்ந்த இந்தக் கொலை மற்றும் அதன் பின்னரான அதிர்ச்சிகரமான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.