5 சிறுமியரை சீரழித்த காமகொடூரனுக்கு 5 மரண தண்டனை..!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டியை சேர்ந்தவர் சந்திரன், 45. இவருக்கு, மனைவி, மகள், மகன் உள்ளனர். மகளின் பிரசவத்திற்காக, சந்திரனின் மனைவி, மகள் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, 2024 பிப்., 4ல், அப்பகுதியில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுமியிடம், 'மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடலாம்' எனக்கூறி அழைத்து வந்த சந்திரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல, மேலும் நான்கு சிறுமியரிடம், மொபைல் போனில் வீடியோ கேம் விளையாட தருவதாகவும், தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட 20 ரூபாய் தருவதாகவும் கூறி, மனைவி வீட்டில் இல்லாத வெவ்வேறு நாட்களில், தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, திருப்புத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2024 பிப்., 13ல், சந்திரனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இதில், சிறுமியரை மிரட்டியதற்கு, 2 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், முதல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு, 20 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், மற்ற நான்கு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு, 4 ஆயுள் தண்டனை விதித்தார். இதைத்தவிர, ஐந்து சிறுமியரையும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 5 மரண தண்டனைகளும், ஒட்டுமொத்தமாக, 11,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியர் ஐவரின் குடும்பத்திற்கு தலா, 7 லட்சம் ரூபாயை, தமிழக அரசு இழப்பீடாக வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

