"அதிமுகவை முழுமையாக அழிக்கும் வேலையை அமித்ஷா செய்து வருகிறார்" - மாணிக்கம் தாகூர்
2011 நடைபெற்ற தேர்தல் மோதல் தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “மோடி யாருடைய பக்தர் என்பது ஊரெல்லாம் தெரிந்து விட்டது. அவர் அதானி, அம்பானியின் பக்தராக தான் உள்ளார். அதானி அம்பானி பக்தராக இருப்பதால் இன்று வரை பிரதமராக மோடி உள்ளார். ஏழை எளிய மக்களை அவர் கவனிக்கவில்லை. அதிமுகவாக இருந்தது தற்போது அமித்ஷா அதிமுகவாக மாறிய கதை எல்லோருக்கும் தெரியும். அமித்ஷாவிடம் கேட்காமல் பழனிசாமி தலைமையிலான அதிமுக எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது. இப்போது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் மனவேதனை அடையும் வகையில் ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக்கொள்ளும் அம்மையாருடன் அமித்ஷா அரைமணி நேரம் பேசியிருக்கிறார். அதன் பிறகும் அதைப் பற்றி பேச திராணியில்லாத பழனிசாமி மற்ற அதிமுக தலைவர்களும் இதைப் பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை. பழனிசாமி ரிப்போர்ட் கொடுக்கத்தான் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். டெல்லி பாஜகவின் அடிவருடியாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார். அதிமுக என்ற கட்சியை முழுவதுமாக முடிக்கின்ற வேலையை அமித்ஷா செய்து கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
8 வருடங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி 5 அடுக்குகளாக கொண்டுவரப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பே தவறான ஜிஎஸ்டி என ராகுல் காந்தி சொன்னார். உடனடியாக ஜிஎஸ்டி வரியை மாற்ற வேண்டும் என எட்டு வருடங்களுக்கு முன்பே ராகுல் காந்தி சொன்னார். ஜிஎஸ்டியை மாற்றுவோம் என நாங்கள் தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்திருந்தோம். ஆனால் எட்டு வருடங்களாக 32 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டு இப்போது ஜிஎஸ்டியை மாற்றியதால் அவர்கள் மக்களிட. கொள்ளையடித்த பணத்தை திருப்பி தருவார்களா என ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுள்ளார். அதைப்பற்றி சொல்ல திராணி இல்லாத நிர்மலா சீதாராமன் தற்போது கதை விட்டுக் கொண்டுள்ளார். சாமானிய மக்கள் ஜிஎஸ்டியால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிர்மலா சீதாராமனின் தற்போதைய பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இழிவுபடுத்தக்கூடிய வகையிலும் உள்ளது. தேர்தல் தான் எல்லாவற்றையும் முடிவு செய்ய வேண்டும். எல்லோரும் கட்சி ஆரம்பிக்கலாம். தேர்தலில் நிற்கலாம். கடைசியில் வாக்கு எண்ணும் போது தான் யாருக்கு ஆதரவுள்ளது. யாருக்கு வெற்றி என தெரியும். அரசியல் கட்சிகள் எல்லாரும் வாக்குறுதிகள் நிறைய கொடுப்பார்கள். திமுக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. சொல்லாத பல முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.


