கஞ்சாவை மூக்கில் உறிஞ்சி கெத்தாக வீடியோ எடுத்து சிக்கிய மன்சூர் அலிகான் மகன்! பரபரப்பு பின்னணி

 
ச்

சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறை சமீபத்தில் எடுத்து வரும் கைது நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 4 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். 

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த காவலர்கள் கைது ஒரு புறம் இருந்தாலும், அடுத்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருப்பது திரைத்துறை உள்ளிட்டோரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஜெஜெ நகர் பகுதியில் கடந்த மாதம் 3-ம் தேதி போதைப் பொருள் விற்பனைக்காக வந்த கல்லூரி மாணவன் கார்த்திகேயனை ஜெஜெ நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 'ரெடிட்' ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததோடு, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி, மந்தைவெளியைச்  சேர்ந்த அரவிந்த் பாலாஜி, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல், மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத், ஆருணி உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது 6 நண்பர்களை ஜெஜெ நகர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் தள்ளி உள்ளனர்.  அதில், அலிகான் துக்ளக், கார்த்திகேயனிடமிருந்து ஓ.ஜி. கஞ்சா போன்ற போதை பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. குறிப்பாக மருத்துவ பரிசோதனை அடிப்படையில் நிரூபணமாகி உள்ளது. மேலும் துக்ளக் அலிகான் அவரது நண்பர்களுடன் இணைந்து பிற நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இந்த கும்பலுடன் நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்த அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதில் கைதான பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜிடோன் முகமது ஜபின் என்பவர் மூலம் தான் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஜிடோன் முகமது ஜபின் மூலம் அலிகான் துக்ளக் ஓஜி கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அலிகான் துக்ளக் தான் போதைப்பொருளை உட்கொள்வதை தானே வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திரைப்படங்களில் வரும் காட்சி போல அவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  நாளடைவில் அலிகான் துக்ளக் தான் பயன்படுத்தி வந்த போதைப்பொருளை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து தொழிலாகவே மாற்றியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்  உள்ளிட்ட ஏழு பேரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன.அவர்களுஜக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி பரம்வீர் ஏழு பேருக்கும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

விசாரணைக்கு முழுமையாக அலிகான் ஒத்துழைக்காததால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஜெஜெ நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட  அலிகான் துக்ளக் கடந்த 2019 ம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகான் இயக்கத்தில் வெளியான, கடமான்பாறை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.