மரக்காணம் கள்ளச்சாராய மரணம் விபத்து அல்ல.. திட்டமிடப்பட்ட சதி - கிருஷ்ணசாமி பகீர்..

 
  கிருஷ்ணசாமி

மரக்காண மது மரண மர்மங்கள்.! ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கவும், டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்தவும் அரங்கேற்றப்பட்ட சதியா? என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் மதுராந்தகம் ஆகிய வெவ்வேறு பகுதிகளில் ’விஷ மது - கள்ளச்சாராயம்’ அருந்தி ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டோர் மரணமெய்திய செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளச்சாராயம், மெத்தனால், எத்தனால், வார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு போதையூட்டும் பொருட்களை அருந்தி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவே தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஏகபோகமாக மதுவைக் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது என மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட நாள் முதல் ஆட்சியாளர்கள் நியாயம் கற்பித்து வருகிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 19 மதுபான ஆலைகளில் உற்பத்தியாகும் அந்நிய நாட்டு மதுபானங்கள் TASMAC (Tamil Nadu State Marketing Corporation Limited) என்ற நிறுவனத்தின் மூலம் 5,500-க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம்

மது ஆலைகளில் உற்பத்தி, டாஸ்மாக் நிறுவனத்தில் கொள்முதல், விற்பனை மற்றும் டாஸ்மாக் பார்கள் மூலமாக நடைபெறும் விற்பனைகள் மூலம் பெரிய அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலும் நடைபெற்றுள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்களைச் சந்தித்து கடந்த 10 ஆம் தேதி மனு அளித்தோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றக்கூடிய வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழலை முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தோம். மனு அளிக்கப்பட்டு நான்கு தினங்கள் கூட ஆகாத நிலையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற உணர்வும் தமிழகத்தில் கொழுந்து விட்டு எறிகிறது. இது இன்றைய திமுக அரசை கல கலக்கச் செய்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசுத் துறைகளிலிருந்தும் தினமும் “தி – ஸ்டாக்கிஸ்ட்’ குடும்பத்தினர் வீட்டில் கோடான கோடி ரூபாய் கொட்டப்பட்டாலும் கூட டாஸ்மாக் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்திற்கு பிற துறைகள் ஈடாகாது.

ஏனெனில், பாட்டில் மூடி, பாட்டில் மீது ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய லேபிள், பாட்டிலின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டு இருக்கக்கூடிய லேபிள், பாட்டிலின் விலை, சரக்கின் விலை, அதைக் கொண்டு செல்லும் வாகன ஒப்பந்தங்களில் கொள்ளை, விற்பனையில் கமிஷன், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் பார்கள் மூலமாக நடைபெறும் விற்பனை, காலிப்பாட்டில் விற்பனை, பயன்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டியில் விற்பனை என அனைத்திலும் கமிஷனோ கமிஷன் என்று தினமும் கோடி கோடியாகக் குவிவதால் அந்த வருவாயை இழப்பதற்கு கோபாலபுரத்துக் குடும்பத்தினர் தயாராக இருக்க மாட்டார்கள்.

கள்ளச்சாராயம்

நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது; தென்னந்தோப்புகளில் கள் இறக்கப்படுகிறது; அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு டாஸ்மாக் லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது; கேரளாவிற்கு கடத்தி விற்கப்படுகிறது என்றெல்லாம் சுட்டிக்காட்டினால் எல்லா அமைச்சர்களும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து மறுப்பார்கள்; முதலமைச்சரோ ஒரு படி மேலே சென்று விளம்பரத்திற்காக என்பார், ஆதாரம் எங்கே! ஆதாரம் எங்கே! என்று அலறுவார்.

ஆனால், இப்பொழுது ஒன்றல்ல, மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்து விட்டார்கள்; 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செய்தி வெளியாவதற்கு முன்பே இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு நட்ட ஈடாக ரூபாய் 50,000 தானம் செய்திருக்கிறார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் அப்பாவி மீனவ குடும்பங்கள் அவர்கள் பயன்பெறட்டும்; ஆட்சேபமில்லை. ஆனால், இதே போன்று தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அன்றாட மரணம் எய்தியவர்களின் குடும்பங்களுக்கும் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் தான். எவ்வளவோ பேர் விபத்தில் உயிரிழக்கிறார்கள்; சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி பட்டாசு விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள்; மின்னல் – இடி தாக்கி விவசாயிகள் உயிரிழக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் ரூ 50,000 முதல் ரூ 1,00,000 பெறுவதற்கே தலைகீழாக நின்று போராட வேண்டி இருக்கிறது. திமுக அரசின் அரசின் கருமித்தனத்தை ஏற்கனவே பல அறிக்கைகளில் நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

அண்மையில் இரண்டு சம்பவங்களில் இவர்கள் காட்டிய தாராளமும், அவசரமுமே இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க முற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டபோது கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்க ஒரு கோடி வழங்கினார்கள். இப்பொழுது கள்ளச்சாராயத்தால் இறந்ததாகக் கூறி உடனடியாக ரூபாய் 10 லட்சம் நட்ட ஈடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக அரசின் இச்செயல்பாடுகளால் மரக்காண மது மரணத்தின் பின்னால் உள்ள சதி அம்பலமாகிறது. தமிழகத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது கோடான கோடி தமிழக பெண்களின் கோரிக்கை; டாஸ்மாக்கில் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பு.

இறப்பு

இந்நிலையில் எதை விட்டுக் கொடுத்தாலும் டாஸ்மாக்கை விட்டுக் கொடுப்பதற்கு தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பம் எளிதாக முன் வராது. ஏனெனில், அது பொன் முட்டையிடும் வாத்தாக செயல்படுகிறது. கோடான கோடி ரூபாயை வசூல் செய்து தினமும் கல்லாக்கட்டும் பணியைத் திறம்படச் செய்வதற்கென்றே ஒரு அமைச்சர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.

1937 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் அமலிலிருந்த பூரண மதுவிலக்கை ரத்து செய்து அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சொன்ன விளக்கம் கள்ளச்சாராயத்தை தடுக்கவே என்பதாகும். எனவே, தந்தை வழியிலிருந்து ஆட்சி செய்யும் ஸ்டாலின் அந்தப் பாதையிலிருந்து மாறுபடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் ஆட்சியிலிருந்து போகின்ற வரையிலும் அல்லது அகற்றப்படுகின்ற வரையிலும் புறவாசலில் கொட்டிக் கொடுக்கும் டாஸ்மாக்கை தூக்கித் தான் பிடிப்பார்கள். எனவே, மதுவிலக்கு தளர்வைத் தொடர்வதற்கு உண்டான காரணங்களைக் கற்பிப்பதற்காகவே மரக்காணம் & மதுராந்தக விஷமது கள்ளச்சாராய மரண சதிகள் அரங்கேற்றப்பட்டு இருப்பது உறுதியாகிறது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் வரும்; சாவுகள் நிகழும்; கணவன்மார்கள் எல்லாம் இறந்து போவார்கள். எனவே, கள்ளச்சாராயத்தை அனுமதிப்பதா? அல்லது அரசால் நடத்தப்படும் மதுபான கடைகளைத் தொடர்வதா? என்று பெண்கள் மத்தியிலே ஒரு தீயப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்துவதற்கு தீட்டப்பட்ட சதியாகவே இந்நிகழ்வை கருத வேண்டி இருக்கிறது.

இதுபோன்று சதி செய்வதற்கு உண்டான முன்னுதாரணங்கள் இருந்திருக்கிறது. ஏனென்றால் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பு, கூவம் ஆற்றைச் சுத்தம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட மூன்று கோடி எங்கே? என்று கேட்டதற்கு, கூவத்தில் முதலைகளை விட்டு ஊழலை மூடி மறைத்த சம்பவங்கள் உண்டு. சர்க்கரை ஊழலில் சர்க்கரை எங்கு என்று கேட்டபோது, சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது என்றும், சாக்கு எங்கே என்று கேட்டதற்கு கரையான் தின்று விட்டது என்றும் ஊழலை மறைத்தவர்கள் தான் இந்த திராவிட மாடலின் முன்னோடிகள்.

கிருஷ்ணசாமி

ஆளும் கட்சியினரின் ஆதரவின்றி, மரக்காணம் மது மரணச் சம்பவத்திற்கு காரணமான நபரால் எப்படித் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்க முடியும்? ஆளுங்கட்சி பிரமுகர் என்ற காரணத்தினால் தானே அரசும், அரசு அதிகாரிகளும் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். எனவே, விழுப்புரத்தில் நடந்த இந்த விஷ மது விபத்து பல்வேறு விதமான சதிகளை கொண்ட நிகழ்வாகும். இதில் அரசியல் சதியும் சூழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. முதலில் இந்த விபத்துக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மாவட்ட அமைச்சர் பொன்முடியும், சாராயத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து மது கடத்தி வரப்படுவதாலும், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மது பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாலும் இது இரண்டிற்கும் மேற்பட்ட மாநில அரசுகள் சமந்தப்பட்ட சம்பவம் என்பதாலும் ”மத்திய அரசே ஒரு விசாரணை கமிஷனை” அமைத்து கள்ளச்சாராய உயிரிழப்பில் உள்ள சதியை வெளிக்கொணரவும்; அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்துகிறேன்.  மரக்காண விஷமது மரணங்கள் விபத்துக்கள் அல்ல, டாஸ்மாக் நிறுவனத்தில் புரையோடிப்போய் விட்ட ஒரு லட்சம் கோடி ஊழலை மறைக்கவும்; மதுவிலக்கை அமல்படுத்தாமல் டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்த காரணம் கற்பிக்கவும் திட்டமிடப்பட்ட சதியே ஆகும்.! ” என்று குறிப்பிட்டுள்ளார்.