இந்த 4 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை

 
rain

குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மிக மிக பலத்த மழை பெய்யும் என தனியார் வானிலை வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மழை

வங்கக் கடலின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும்,  வானிலை ஆராய்ச்சி மையமானது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டத்திற்கு மிகுந்த கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலைக்குள் 30 செ.மீட்டருக்கும் மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. ராமநாதபுரத்தில் 19.1 செ.மீ, நாங்குநேரியில் 18.6 செ.மீ, நம்பியாறு அணை பகுதியில் 18.5 செ.மீ மழை பொழிந்துள்ளது. 


இதேபோல் களக்காடு 16.2 செ.மீ, கொடுமுடியாறு அணைப் பகுதியில் 15.4 செ.மீ மழை பொழிந்துள்ளது. மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் நாளை காலைக்குள் 50 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும். செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் நாளை காலைக்குள் 50 செ.மீட்டரை தாண்டிவிடும். தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.