கால்வாய்கள் தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்க திட்டம் - மேயர் பிரியா அறிவிப்பு..

 
மேயர் பிரியா மேயர் பிரியா


பருவ மழையை எதிர்கொள்ள சென்னையில் உள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணி முன்கூட்டியே தொடங்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்திடும் வகையில், மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினைத்  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின்  செயல்பாட்டின் முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் குப்பைகள் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேயர் பார்வையிட்டார். இதில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “தமிழகத்தில் 1077 அரசு அலுவலகங்களில் இன்று தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகளின் வகைகள் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குப்பைகளை முற்றிலுமாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  மண்டலம் வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக ஏலம் விடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கட்டிட கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வணிக கட்டிடங்கள்  அப்பார்ட்மெண்ட், மிடில் கிளாஸ் வீடு, 1000 சதுர அடிக்கு மேற்பட்ட வீடுகள் என தனித்தனியாக பிரித்து  அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

கட்டிடக்கழிவு

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யக்கூடிய பணிகள் மாநகராட்சி சார்பில் எடுத்து வருகிறோம். ஒன்றிய அரசு நாய்களை கருத்தடை செய்து அதே இடத்தில் விட உத்தரவிட்டிருக்கிறார்கள்.  அதனால் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக தெரு மற்றும் வீட்டு நாய்களுக்கு சிப் ஒன்றை பொருத்தி ரேபிஸ் உள்ளிட்டவைகளை கண்டறியக்கூடிய பணிகளில் ஈடுபட இருக்கிறோம். எப்போதுமே பருவமழையை ஒட்டி ஆகஸ்ட் மாதம் தான் கால்வாய், ஓடை போன்ற இடங்களை கொசு வராதபடி சுத்தப்படுத்துவோம். இந்தாண்டு முன்னதாகவே மழை துவங்கி இருப்பதால் ஜூன், ஜூலை மாதத்தில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார்.