மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகல் என்கிற முடிவில் உறுதியாக உள்ளேன்- துரை வைகோ
மல்லை சத்யா உடனான முரண்பாட்டால் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியதாக பேசப்படும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.

நிர்வாக குழு கூட்டத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகல் என்கிற முடிவில் உறுதியாக உள்ளேன், நான் எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன். பிரச்சனை எதனால் வந்தது என்று மூத்த நிர்வாகிகள் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் பேசும் பொழுது உங்களுக்கு தெரியும். நான் கொடுத்த அறிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை. ‘மதிமுக தான் வைகோ - வைகோ தான் மதிமுக’ நான் எந்த ஒரு மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பேசவில்லை. மதிமுகவில் ஒவ்வொருவரும் சேனாதிபதிதான், மதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் தளபதிகள், சேனாதிபதிகள் தான். ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால் கட்சியின் கொடி இல்லாமல் காரில் செல்கிறேன்.
மதிமுக இயக்க தோழர்களுக்கு நான் எடுக்கப் போக முடிவு தெரியாது. இந்த பொறுப்பில் நான் இருக்கப் போய் தான் அவதூறு பேசுகிறீர்கள். தலைவரை காயப்படுத்தாதீர்கள், கட்சியை இழிவு படுத்தாதீர்கள் என்பதால் தான் என்னுடைய வேண்டுகோள் அறிக்கையாக கொடுக்கப்பட்டது. என் நடவடிக்கைகளில் தவறு இருந்தால் நிர்வாகிகளே பேசப்போகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்பதை சொல்லப் போகிறார்கள். நிர்வாகிகள் கூட்டத்தில் அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை வைத்துதானே முடிவெடுக்க முடியும்” என்றார்.


