துரை வைகோ சின்ன பையன்...அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - திருப்பூர் துரைசாமி

 
Tirupur duraisamy

துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என திருப்பூர் துரைசாமி கூறியுள்ளார். 

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர். மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது என கூறியிருந்தார். 

durai vaiko

துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ, கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. மதிமுக - திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். இது மதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் செயல் என கூறினார். 

இந்நிலையில், திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவரிடம் துரை வைகோவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:- துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை என்றார்.