முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புக்கு மதிமுக ஆதரவு!!

 
stalin

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியாகாந்தி, ஓ பன்னீர்செல்வம், சரத்பவார், லாலுபிரசாத், பவன்கல்யாண், ஓவைசி உட்பட 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடந்த 2ஆம் தேதி  மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் நாள், குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் அறிவித்தார். அதன்படி இந்த கூட்டமைப்பில் இணைய 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  அக்கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்திருக்கிறார்.

vaiko

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.  அத்துடன் சமூக நீதி கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தமிழக முதல்வரும் - திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார் .இந்த வரிசையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்து மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என அறிவித்து, முதல்வரின் முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து பொதுச்செயலாளர் அவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

vaiko ttn

சமூக நீதி கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக ஆவடி அந்தரிதாஸ் வழக்கறிஞர் ஆவார். இவர்  மதிமுக தேர்தல் பணிச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநிலத் தலைவர், திருவள்ளூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை  வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.