மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலை இனி ’செம்மொழி சாலை’ என அழைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

 
ஸ்டாலின்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை ’செம்மொழி சாலை’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்கி ‘ கலைஞர்  மு. கருணாநிதி செம்மொழி  தமிழாய்வு அறக்கட்டளையை;’ நிறுவினார். அதனைத் தொடர்ந்து தமிழ் ஆய்வில் சிறந்த பங்காற்றிய  அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

செம்மொழி தமிழ் விருது

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் கடந்த 2010 முதல் 2019 வரையில் தமிழில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 10 அறிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும்  வழங்கினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை இனி  ’செம்மொழி சாலை’ என  அழைக்கப்படும்  என்று அறிவித்தார்.  மேலும்,   தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகத்தில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு என தனியாக கட்டிடம் வேண்டும் என்று கலைஞர் விரும்பினார் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.