பெண் வயிற்றில் மருத்துவ உபகரணம்... அலட்சிய தனியார் மருத்துவமனை - அதிரடி காட்டிய ஆணையம்!

 
சஃப்

புதுச்சேரி அருகே அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவ உபகரணம் உள்ளே வைக்கப்பட்டதால் பாதித்த பெண்ணுக்கு, சம்பந்தப்பட்ட கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மாகாந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.7.20லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர்‌ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. உத்தரவிட்ட 45 நாளுக்குள் உரிய தொகையைத் தராவிடில் 9 சதவிகித ஆண்டு வட்டியுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ அறுவைசிகிச்சை உபகரணம்


புதுச்சேரி அருகேயுள்ள நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மாகாந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். ஆனால், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். ஆனால் மருந்து, மாத்திரை அளித்த மருத்துவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தினர். அப்போதும் வலி தீராததால் கோரிமேட்டில் அரசு பல் மருத்துவமனைக்கு பிரபாவதி சென்றார். அங்கு பரிசோதித்த நிலையில், குடல்வால் பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உடலில் மருத்துவ உபகரணம் இருப்பது தெரியவந்தது. 

அதையடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு பிரபாவதி அனுப்பிவைக்கப்பட்டு அறுவைச் சிகிச்சையில் மருத்துவ உபகரணம் அகற்றப்பட்டது. கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மாகாந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடந்தபோது உபகரணம் உள்ளே வைத்து தைக்கப்பட்டது தெரியவந்து. அதையடுத்து தனக்கு நஷ்ட ஈடு கோரி, பிரபாவதி தரப்பில் புதுச்சேரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை குறைதீர் ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

புதுச்சேரி: பெண் வயிற்றில் மருத்துவ‌ உபகரணம் வைத்து தைப்பு: ரூ. 7.20 லட்சம்  நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பிரபாவதிக்கு கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மாகாந்தி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.7 லட்சம் நஷ்ட ஈடாகவும், வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரம் தரவும் உத்தரவிடப்பட்டது. மேலும், உத்தரவிட்ட 45 நாளுக்குள் உரிய தொகையைத் தராவிடில் 9 சதவிகித ஆண்டு வட்டியுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரவேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.