வருகிற சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

 
vaccine

வரும் 23ம் தேதி சனிக்கிழமை 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுமென மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது. மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டுமே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 

vaccine

இந்த நிலையில், வரும் வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற சனிக்கிழமை 6ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டு வந்த முகாம் இந்த முறை சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று கூறினார்.

இதற்கான காரணத்தை விளக்கிய அவர், அசைவப் பிரியர்கள் மற்றும் மது பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம் மற்றும் மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என வதந்தியை நம்புகிறார்கள். எனவே, அவர்கள் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.