ஈரோட்டில் இன்று 577 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்... 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு!

 
vaccination camp

ஈரோடு மாவட்டத்தில் இன்று 4-வது கட்டமாக 577 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த, செப்டம்பம் 12, 19, 26-ல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்ட முகாமில் 1,08,315 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 1,01,247 பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில், 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு, 48,240 பேருக்கும், மூன்றாம் கட்ட முகாமில், 82,440 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு 86,177 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று நான்காம் கட்டமாக இன்று 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து,  577 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 

vaccine
இதனையொட்டி, தடுப்பூசி முகாம்களில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஓட்டுச்சாவடி பகுதியில் குறைந்தபட்சம், 200 பேருக்கு டோக்கன் வழங்கி, தடுப்பூசி செலுத்த அழைத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்த வருபவர்களின் விபரங்களை  அந்தந்த பகுதியில் உள்ள கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

இன்று நான்காவது கட்டமாக நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில், ஈரோடு மாநகர் பகுதியில் வழக்கம்போல் வார்டுக்கு ஒரு மையம் வீதம் 60 வார்டுகளிலும் 60 மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக, 4 சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாநகர் பகுதியில் 64 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.