மெட்ரோ கட்டுமான விபத்தில் உயிரிழந்தவருக்கு நிவாரணம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..
ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்தவருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பொதுவாகவே இரவு நேரங்களில் மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ மேம்பால கட்டுமானம் இடிந்து விபத்துக்குள்ளானது.

இரண்டு ராட்சத தூண்களும் அதற்கு இடைப்பட்ட மேம்பால கான்கிரீட்டும் இடிந்து விழுந்தன. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ ரயில் கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொதுமக்கள் யாரும் வராத வண்ணம் தடுப்புகளை அமைத்து மீட்புப் பணிகளில் களமிறங்கினர்.

இந்நிலையில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ரமேஷுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் எல்&டி நிறுவனமும் இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


