ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை- அதிகாரிகள் ஆய்வு
ஓசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் நேரடியாக ஆய்வு செய்தனர். அத்திப்பள்ளி வழியாக ஒசூர் முதல் பொம்மசந்திரா வரை 23 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மெட்ரோ இரயில் நிறுவனம், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., இன்று (27.08.2024) பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவ் பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 11 கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும். இந்த கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்ப்படுத்தப்படும்.