மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மூன்று மடங்கு உயர்வு

 
mettur
கர்நாடக அணைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைய தொடங்கியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன் தினம் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீர் இன்று மாலை 4 மணி அளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இன்று காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 54 கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று மாலை 4 மணிக்கு 16 ஆயிரத்து 577 கன அடியாக அதிகரித்துள்ளது. மூன்று மடங்கு அதிகரித்துள்ள நீர்வரத்து அடுத்த சில மணி நேரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பிருக்கிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உரிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான நடைமுறைப்படி ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் நீர்மட்டமும் 50 அடிக்கும் கீழாக குறைந்து விட்டது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 44.62 அடியாகவும் நீர் இருப்பு 16.577 டி.எம்.சியாகவும் உள்ளது