கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்!
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


