இதை செய்யவே கூடாது.. தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..

 
அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது என்றும், விதிகளை மீறும்  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி , நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்  பங்கேற்று தங்கள் பகுதியில் பள்ளிகள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பள்ளிக்கல்வித்துறை

இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தி  வருவதாகவும்,  இதில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். கழிவறைகள் அமைப்பு, குடிநீர் வசதி ஆகிய கோரிக்கைகள் அதிக அளவில்  வருவதாக குறிப்பிட்ட அவர், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.  மேலும்  இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றும் இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 35 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.

School Education minister anbil magesh

தொடர்ந்து பேசிய அவர்,  தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.  இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவே   11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும்,  விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.