ஊர் மக்கள் கோரிக்கையை ஏற்று ‘அரிசன் காலனி' என்ற பெயரை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஹரிசன் காலனி அருகே அமைந்துள்ளது. 1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக முனுசாமி பிள்ளை தெரு இருந்த இடத்தில் ஊர் மக்கள் நிலம் வழங்கியதை தொடர்ந்து அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏற்படுத்தப்பட்டது. இந்த பெயர் பலகையில் பள்ளி உள்ள இடம் அரிஜன காலனி என்று இடம் பெற்றிருந்தது. இதனை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த நிலையில், பள்ளி ஆரம்பித்த போது சுமார் 120 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வெறும் 12 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகிறார்கள். இதனால் தங்கள் பள்ளிக்கு பெயரை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பாக வழக்கறிஞர் அன்பழகன் என்பவரும் பள்ளியின் மேலாண்மை குழுவும் வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று மாலை 3 மணி அளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த பின் அரிசன காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சென்று தனது கையினாலே அரிஜன காலனி என்பதை கருப்பு மை கொண்டு அழித்தார. அதன் பிறகு பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனா தேவியிடம் பெயர் மாற்றத்திற்கான அரசாணையை வழங்கினார். இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெயர் பலகையில் இடம்பெற்று இருந்த அரிசன காலனி அழிக்கப்பட்டு மல்லசமுத்திரம் கிழக்கு என்று எழுதப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, இதற்காக போராடிய ஊர் பெரியவர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் திரு. கணேசன் - வழக்கறிஞர் திரு. அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்! https://t.co/2PVXsNGZjP
— M.K.Stalin (@mkstalin) November 25, 2024
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் திரு. கணேசன் - வழக்கறிஞர் திரு. அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.