இல்லம் தேடி கல்வி திட்டம்; முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

 
cm

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் முறையாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த போது மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்தது. அம்மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

cm

தற்போது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ கல்விப் தொலைக்காட்சியின் மூலமாகவே பாடம் நடத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்திருப்பதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களிடம் இருக்கும் கற்றல் குறைபாடுகளை போக்க 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'இல்லம் தேடி கல்வி' என்கிற திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1 மணி முதல் அரை மணி நேரத்திற்கு தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 'இல்லம் தேடி கல்வி' என்கிற இத்திட்டம் இன்று பிற்பகலில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.