மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்! விரைவில் 20 லட்சம் மடிக்கணி

 
1 1

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இவ்விழாவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராமேஸ்வரம் பள்ளி மாணவி கொலை சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. படிக்க வந்த மாணவிக்கு நேர்ந்துள்ள கொடுமையை பெற்றோர் மனநிலைமையில் இருந்து பார்க்கும்போது வேதனையை தருகிறது. சொந்த காரணத்திற்காக, இந்த கொலை நடந்திருந்தாலும் கூட கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது'' என்றார்.

தொடர்ந்து, ''20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மிக விரைவாக வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. குழந்தைகள் எந்த விதமான போதை பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது என "மகிழ் முற்றம்" என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். இரட்டை இலக்கு வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழகம். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக சொல்கிறார்கள் ஆனால், அந்த வளர்ச்சியையும் சிலர் தடுக்கிறார்கள்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என என பிரதமர் கூறுவது குறித்த கேள்விக்கு, ''ஒவ்வொரு முறையும் அவர் கூறிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் மக்கள் கண்காணித்து வாக்களிப்பார்கள்.'' என்றார்.