மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை- அன்பில் மகேஷ்

 
anbil magesh anbil magesh

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளிக்கல்வி துறை பொது நூலக இயக்கம் சார்பில் சென்னை இலக்கிய திருவிழா - 2025 நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார், இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அமைச்சர் காந்தி, சட்ட  மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழகத்தில் பாஜகவினர் செல்லும் இடமெல்லாம் ஒரு திருக்குறள் சொல்லிவிட்டு மறுபுறம் சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி நிதி ஒதுக்குகிறார்கள். நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை, தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதுமானதாக உள்ளது.  முடிந்தவரை எங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். உலக நாடுகளிலேயே தமிழ்நாட்டை பாராட்டி வரும் நிலையில், மத்திய அரசு தமிழ்நாடு மீது மொழியை திணித்து வளர்ச்சியை தடுக்க வேண்டும் என நினைக்கிறது.

தமிழ்நாடு மக்கள் உணர்வுபூர்வமாகவும் உயிராகவும் நினைக்கும் மொழியை தடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மறைமுகமாக வேலை செய்கிறது. மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கொண்டுவர முயற்சிப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தடுத்து வருகிறார். 2000 கோடியல்ல 10 ஆயிரம் கோடியாக கொடுத்தாலும் தேவையில்லை, கொள்கையை விட்டு நிதி பெற வேண்டிய அவசியம் தேவையில்லை என முதலமைச்சர் சொல்லிவிட்டார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.