"அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது"- அன்பில் மகேஷ்
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடியை வாங்கி கொடுத்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளி கல்வித்துறை குறித்து கேள்வி கேட்கட்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழகத்தின் 34 ஆவது கணினி நுண்ணறிவு ஆய்வகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். AI தொழில்நுட்ப ஆய்வகம், மினி ட்ரோன் பயிற்சியில் அசத்தும் மாணவர்களின் செயல்பாடுகள், உள்ளிட்டவர்களை அமைச்சர் ஆய்வு செய்து மாணவர்களிடம் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்றிய அரசிடம் இருந்து எங்களுக்கு வழங்க வேண்டிய 2152 கோடியை வாங்கி கொடுத்துவிட்டு பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது? என்று அண்ணாமலை கேள்வி கேட்கட்டும். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வேறு மாநிலத்திற்கு வழங்கிய ஒன்றிய அரசின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம். கல்வியை மாநில பட்டியலோடு இணையுங்கள் எங்கள் மாணவ மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது.
கடந்த கல்வியாண்டில் இந்தியா முழுவதும் 600 தமிழக மாணவர்கள் உதவித்தொகையை பல்வேறு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளனர். இத்தனை வருடத்தில் 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி தமிழகத்தின் வரிதொகை ஒன்றிய அரசுக்கு சென்றுள்ளது. இந்தத் தொகையில் தமிழகத்திற்கு எவ்வளவு கிடைத்திருக்கும். அதனால்தான் தமிழக முதல்வர் வடக்கில் இருக்கும் அரசா வட்டிக்கடையை நடத்தும் அரசா என்று ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் எடுத்துவிட்டுதான் செல்வேன் என்ற அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வருகிறது” என்றார்.


