செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் அதிகரிப்பதால் நேற்று முன்தினம் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பிறகு படிப்படியாக நீர் திறப்பு 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. மழை தொடர்வதால் உபரி நீரின் அளவை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க உபரி நீரை சீராக வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியை 21 அடியை சீராக கண்காணிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடையாறு ஆற்றில் 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மழை அதிகரித்தால் அனைத்து மதகுகளையும் திறந்தாக வேண்டும். நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும். மக்களின் உயிர் பெரிது.
ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தில் முடிவு. அதனால் அப்பகுதிகளிலிருக்கும் குடியிருப்புகளை அகற்றுகிறோம். நீர் வெளியேறுவதை ஜாக்கிரதையாக கவனித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.