ஆளுநர் அரசியல்வாதியாக செயல்படுகிறார்- அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியுடன் முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல் சண்டை போடுகிறார், இதனால் அவருக்கு ஒன்றும் லாபம் கிடையாது என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர், காட்பாடி காந்தி நகரில் ஆதி லட்சுமி திருமண மண்டபம் அருகில் இன்று பொங்கலை முன்னிட்டு திமுக பொதுசெயலாளரும் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று கட்சி தொண்டர்களை சந்தித்தார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், துணைதலைவர்கள் சங்கர் செல்வம் உள்ளிட்டோர் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து கூறினர். அமைச்சரும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார், இதற்காக திமுக தொண்டர்கள் வரிசையில் காத்திருந்து அமைச்சரை சந்தித்து செல்கின்றனர்
முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக ஆளுநர் நேற்று ஒசூரில் பேசும் போது தலித்கள் தமிழகத்தில் ஒடுக்கபடுகிறார்கள் என கூறியுள்ளார். ஆளுநருக்குரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு ஆளுநர் ரவி முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல் ஆட்சியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை, ஆளுநருக்கு லாபமுமில்லை. ஆகையால் ஆளுநர் அரசியல்வாதியாக செயல்படுகிறார். அதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளுநரை மாற்றுவது என்பது மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை, நாங்கள் கவர்னர் பதவியே வேண்டாம் என சொல்கிறோம். இவர் போய் இன்னொருவர் வர வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை. தமிழகத்தில் புதிய மணல்குவாரிகளை நாங்களே துவங்க வேண்டுமென்றாலும் முடியாது, எல்லா ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது. மணல் எடுக்க முடியாது. பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் துரைமுருகன் ஓய்வு பெற வேண்டுமென சொல்கிறார். அவரின் நல்லெண்ணத்திற்கு நன்றி! பொதுவாக அவர் என்னை பற்றி எப்போதும் பேசமாட்டார், இப்பொழுது பேசியிருக்கிறார். நான் அதனை பெரிதாக எடுத்துகொள்வதில்லை” என்றார்.


