நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

 
Duraimurugan

நீட் தேர்வு ஒழிந்தது என்ற பெயர் வருவதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஆக இருப்பார் என திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். 

நீட் தோ்வை தடை செய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.   நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

dmk

உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, திமுக இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகிய அணிகளில் இல்லையென்றாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளேன். 
நீட் தேர்வில் உயிரிழந்த மாணவ, மாணவிகள் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. இந்தியை எதிர்ப்பது போல, நீட் தேர்வையும் எதிர்த்து தமிழ்நாடு போராடி வருகிறது.  நீட் தேர்வு ஒழிந்தது என்ற பெயர் வருவதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஆக இருப்பார். நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும்.