மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

 
duraimurugan

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை நடத்தினார்.  மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேகதாது அணை - ஒகேனக்கல்

இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இன்று மீண்டும் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இந்த சந்திப்பின்போது, காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக பெற்றுத்தர மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுன் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய நீரை கர்நாடக அரசு இன்னும் திறந்துவிடாத நிலையில், இதுகுறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.