வள்ளுவர் கோட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்!

 
valluvar kottam

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

"திருக்குறள்" என்ற தமிழ் இலக்கியத்தை, 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் படைத்த "அய்யன் திருவள்ளுவருக்கு" ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், சென்னை மாநகரில் 5 ஏக்கர் பரப்பளவில் 18.9.1974 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு, பல்லவக்கலை சிற்ப வேலைபாடுகளுடன் கல்தேரும், (உயரம் 128 அடி), காந்தார கலை வடிவில் தோரண வாயிலும், திராவிட கட்டடக் கலை பிரதிபலிக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதி அவர்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் "வள்ளுவர் கோட்டம்" அமைக்கப்பட்டு. சுற்றுலா தலமாக இருந்தது.

முந்தைய ஆட்சியாளர்களால், பராமரிக்கப்படாததால், சிதிலடைந்து, பொலிவை இழந்து மோசமான நிலையில் இருந்ததை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க ரூ.80 கோடி வழங்கி, 18.1.2024 அன்று துவங்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வரும் இப்பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் இன்று(28.11.2024) நேரடியாக களத்திற்குச் சென்று நடைபெற்று வரும் வள்ளுவர் கோட்டப் புனரமைக்கும் அனைத்து பணிகளையும்
ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.