"கலைஞர் போட்ட பிச்சை" - சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம்!!

 
velu

உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்று  பேசியதற்கு அமைச்சர்  எ.வ. வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ev velu
 

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்  எ.வ.வேலு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.  அப்போது பேசிய அவர்,  முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்பட்டார்.  தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தார்.  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்தார்.  கோவில் கருவறைக்குள் நம்மவர்களின் நுழைய அனுமதிக்கவில்லை என்பதால்,  அனைத்து சமூகத்தினரும்  அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.  திராவிடத்தையும்,  ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது.  காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல;  காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள். தென் மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது.  மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என்றார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

velu

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்  அமைச்சர் எ.வ. வேலு. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, "உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்று  பேசியதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்"என்றார்.