அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பதறவில்லை- அமைச்சர் கீதா ஜீவன்
கடந்த கால தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு தோல்வியை கொடுத்த மக்கள் மீண்டும் கொடுக்க தயாராகி விட்டார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நாராயணனின் தலைமையில் வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்த சமய, அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு ரத்த தானம் முகாமை துவங்கி வைத்தனர். இதனையடுத்து ரத்ததான முகாமில் கலந்து கொண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரத்தம் வழங்கியவர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “அதிமுக −பாஜக கூட்டணியை கண்டு யாரும் அஞ்சவில்லை. கடந்த காலத்தில் அமைந்த அதே கூட்டணி தான் தற்போது அமைந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் அவர்களுக்கு அளித்த தோல்வியையே வரும் தேர்தலில் கொடுக்க தயாராகி விட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும். 8,783 பேர் அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான வேலை நடைபெற்று வருகிறது” என்றார்.


