இது வெறும் டிரைலர், மெயின் பிக்சர் இனிதான் - அமைச்சர் கீர்த்தனா
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு, இது வெறும் டிரைலர், மெயின் பிக்சர் இனிதான் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை தவெக அரசு ஈர்த்துள்ளது. 38,357 வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சர் இனிதான். பரந்தூரில் கையகப்படுத்திய நிலத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். மக்கள் பாதிக்கப்படாதவாறு அந்த நிலங்களில் மாற்றுத் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தப்படும்.
பரந்தூர் என்பது சரிவான ஒரு விளைநிலம். அதே போன்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொச்சி விமான நிலையத்தில் கனமழை பெய்தபோது 18 நாட்கள் அந்த விமான நிலையம் மூடப்பட்டுக் கிடந்தது. என்னுடைய இன்னொரு கேள்வி மத்திய அரசு அனுமதி கொடுத்த பிறகும், ஏன் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தீர்கள்? மத்திய அரசு அனுமதி அளித்திருந்தும் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தை திமுக ஆட்சியில் விரிவாக்கம் செய்யாதது ஏன்? முதல்வரின் அறிவிப்பை பாராட்டி பரந்தூர் உள்ளூர் மக்கள் தங்கள் பகுதி சாலைக்கு 'விஜய் சாலை' என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

