முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பெரிய பாதிப்புகள் இல்லை - அமைச்சர் பேட்டி

 
KKSSR

மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார். 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல்,  சூறைக்காற்றுடன் பெய்த  கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.  மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள்  பாதிக்கப்பட்டன. விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

rain

சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையில் 6 மரங்கள், 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.   சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார்கள் மூலம் அகற்றி வருகிறோம். 22 சுரங்கப் பாதைகளில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும்தான் தற்போது தண்ணீர் உள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தபடி மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் பணிகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். பருவமழை மட்டுமின்றி இதுபோன்று திடீரென பெய்யும் மழையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.