“SIR படிவங்களை திமுகவினர் கொடுப்பதில் என்ன தவறு? விஜய்க்கு தெரியாம இருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும்”- கே.என்.நேரு
விஜய்க்கு வேண்டுமானால் திமுக நல்லவர்கள் போல் வேசம் போடுவதாக தெரியலாம், ஆனால் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களால் திமுகவை மக்கள் நல்லவர்களாகவே பார்க்கிறார்கள் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சி முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 4 லட்சம் கட்லா, கல்பாசு, மிர்கால் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, “புதிய காவேரி பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு ஸ்ரீரங்கம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு பி.எல்.ஏ 2 செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது. மற்ற கட்சிகளின் பி.எல்.ஏ 2 வருவதை யாரும் தடுப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குசாவடிகளுக்கும் பி.எல்.ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். படிவத்தை நிரப்பி தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்ல கூடாது என கூறினால் எப்படி ? நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என எங்கள் மீது தான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாக தான் இதை செய்து வருகிறோம்.
ஒன்றிய அரசு ஜல் ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜி.எஸ்.டி என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. அவர்கள் திட்டங்கள் கொடுத்தால் நாங்கள் ஏன் வேண்டாம் என சொல்கிறோம். த.வெ.க தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சி நல்லவர்கள் போல் வேசம் போடுவது போல் தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு திமுகவும் ஆட்சியும் முதலமைச்சரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். திமுக நல்லவர் போல் வேஷம் போடவில்லை, உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் முதல்வரை வரவேற்கிறார்கள்” என்றார்.


