3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 
ma Subramanian

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 சிறிய குறைகளை சரிசெய்தது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட கல்லூரி டீன்கள் டெல்லியில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் தந்துள்ளார்கள். இது சரியாக இருக்கிறதா என்று அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார்கள். எனவே, 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகாது. தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் சற்று கடினமாகவே இருந்தது. எனவே, இதுகுறித்து மத்திய மந்திரிகள் மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனாவால் ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம். 

தமிழ்நாட்டிற்கு ஒரு மாத காலத்தில் மட்டுமே 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் புதிதாக வந்துள்ளன. பல்வேறு புதிய கல்லூரிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதுகுறித்து ஆளுநரும், எதிர்கட்சி தலைவரும் விமர்சித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்லும் ஒரு கருத்தாகவே இதை பார்க்கிறேன். இவ்வாறு கூறினார்.