ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை - அமைச்சர் தகவல்

 
masu

ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனையடுத்து திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ma subramanian

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரத்தில்  ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:  தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும், முதலமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்தனர். திமுக ஆட்சியில், ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தாலும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.