தமிழ்நாட்டில் கொரோனா கால அனுபவங்கள் குறித்து புத்தகம் எழுதுகிறேன் - மா.சு

 
ma subramanian

தமிழ்நாட்டில் கொரோனா கால அனுபவங்கள் குறித்த ஒரு புத்தகமாக எழுதுவதற்காக தற்போது அதற்கான சேகரிப்புகளை செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ma

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணை குழு இணைந்து நடத்தும் உலக புத்தக தின விழா- 2023 சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மையம் நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பொது நூலக இயக்குனர் இளம்பகவத், இயக்குனரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் சென்னை மாநகர நூலக ஆணை குழுவின் உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். சென்னையில் உள்ள 18 நூலகங்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு படைப்பாளர்கள் வாசகர்கள் என அதிகமானோர் பங்கேற்கும் மாபெரும் இலக்கிய திருவிழாவாக புத்தக தின விழா நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல்முறையாக புத்தக தினத்தை பள்ளி கல்வித்துறையும் பொது நூலக இயக்கமும் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு இணைந்து சிறப்பான முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. ஒரே நாளில் 100 பேர் 100 இடங்களில் உரையாற்றுவது என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. சென்னையில் உள்ள 18 நூலகங்களில் இந்த நிகழ்வு இன்று ஒரு நாள் நடைபெறுகிறது. 
மேலும் இந்த புத்தகத்தின் விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதற்கான சில காரணங்களை நான் உணர்கிறேன். ஏனென்றால் நானும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளேன். நான் மேயராக இருந்தபோது 'மேயர் என்பது பதவி அல்ல பொறுப்பு' என்ற புத்தகத்தையும், அதேபோல் 125 மாதங்கள் 12 வெளிநாடுகள் 25 பல்வேறு மாநிலங்களில் ஓடிய மராத்தான் குறித்த 'ஓடலாம் வாங்க' என்ற புத்தகத்தையும் எழுதினேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நான் எழுதிய ஓடலாம் வாங்க என்ற புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா கால அனுபவங்கள் குறித்த ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்று தற்போது அதற்கான சேகரிப்புகளை செய்து வருகிறேன. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட நிலை இருந்தது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கொரோனாவில் இருந்து மீள்வதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை புத்தகத்தில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஒரு புத்தகத்தை எழுத உள்ளேன்” எனக் கூறினார்.