வெளிநாடுகளில் வசிக்கும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை- மா.சு.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தும் விதமாக 112 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்கள் 300 படுக்கை வசதிகளுடன் Critical Care Unit கட்டப்படவுள்ளதாகவும், விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில், ஓராண்டு நிறைவு செய்துள்ள முழு உடல் பரிசோதனை நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான உணர் , செயல்திறன் பூங்கா மற்றும் புனரமைக்கப்பட்ட சிறுபிராணிகள் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஸ்டான்லி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 12 ஆயிரம் வெளி நோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தும் விதமாக 112 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்கள் 300 படுக்கை வசதிகளுடன் Critical Care Unit கட்டப்படவுள்ளது. விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பணியிடங்கள் கொரானா காலத்தில் பணியாற்றியவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் காலி பணியிடங்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும்.
உரிய அனுமதியின்றி மருத்துவர்கள் செல்ல வாய்ப்பில்லை. வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அரசு மருத்துவர்கள் குறித்த பட்டியல் கோரப்பட்டுள்ளது. கிடைத்ததும் வெளியிடப்படும். மேலும் உரிய அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ள அரசு மருத்துவர்கள், அனுமதிக்கப்பட்டுள்ள காலத்தை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.