விரைவில் 100 தொகுதிகளில் 100 இடங்களில் மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்- மா.சு

 
மா.சு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் 100  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் ஒரே நாளில் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.09.2023) சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 139 வது வார்டு, ஜாபர்கான்பேட்டை, சென்னை உயர்நிலைப் பள்ளி, 140 வது வார்டு, மேற்கு மாம்பலம், சென்னை மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் மற்றும் 142 வது வார்டு, மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 11.01.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி (ஆண்டுக்கு ரூ.1,546 கோடி) இத்திட்டத்தின் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்  யுனிடெட்  இந்தியா  காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனைகள் 853, தனியார் மருத்துவமனைகள் 969 ஆக மொத்தம் 1822 மருத்துவமனைகள் இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றன. இக்காப்பீட்டுத்திட்டத்தில் 1513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளும், 8 சிறப்பு அறுவை சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் உள்ளன. ஒன்றிய அரசும் மற்றும்  தமிழ்நாடு அரசும்  இணைந்து 11.09.2018 அன்று இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 23.09.2018 அன்று முதல் துவங்கப்பட்டது. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 2023 செப்டம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உள்ள 1.43 கோடி குடும்பங்களுக்குள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ்   சமூக, பொருளாதார, சாதி வாரியாக  86,48,748 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளனர்.இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை மேற்கொள்ளலாம்.  இத்திட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்பு 60 : 40 விழுக்காடு  ஆகும். 


முதமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 23.07.2009 முதல் 15.08.2023 வரை 1,30,85,392 பயனாளிகள் ரூ.12,091 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். 1,44,59,810 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.849/- வீதம் மொத்த காப்புறுதி தொகை ரூ.1227,63,78,690/-(1227.63 கோடி) ஆகும். பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார, சாதி வாரியான கணக்கெடுப்பின்படி, 86,48,748 குடும்பங்களுக்கு ரூ.849/- வீதம் கணக்கிடப்பட்ட மொத்த காப்பீட்டுத் தொகை – ரூ.734,27,87,052/- (ரூ.734.27 கோடி) ஆகும்.  பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார, சாதி வாரியான கணக்கெடுப்பின்படி, 86,48,748 குடும்பங்களுக்கு நிர்வாக கட்டணம் ரூ.50/-வீதம் ரூ.43,24,37,400/- (ரூ.43.24 கோடி) பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் மொத்த காப்புறுதி கட்டணத் தொகை ரூ.7,77,52,24,452/- (ரூ.777.52 கோடி) ஆகும். பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 60 விழுக்காடு ரூ.466,51,34,671/- (ரூ.466.51 கோடி) பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 40 விழுக்காடு ரூ.311,00,89,781/- (ரூ.311 கோடி) ஆக மொத்தம் மொத்த செலவினம் ரூ.761,12,44,019/- (ரூ.761.12 கோடி) ஆகும். 


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீடு திட்ட பயனாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுவதுடன்,  பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீடு திட்ட அட்டை பெற்றுள்ள பிற மாநிலத்தவர்களுக்கும்  சிகிச்சை வழங்க உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  18.09.2018 முதல் 28.08.2023 வரையிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டத்திலிருந்து மொத்த பயனாளிகள் (1.43 கோடி குடும்பங்களில்)  31,27,029 பேர் ரூ.4,780 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் ஒருங்கிணைந்த பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீட்டு திட்டத்தின் கீழ் (86,48,748 இலட்சம் குடும்பங்களில்) 16,75,403 பயனாளிகள்  ரூ.2,574 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர்.


கடந்த ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் உள்ள மருத்துவக் காப்பீடு தொடர்பான ஒப்பீடு: கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம்  தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699/- ஆக இருந்தது, இந்த ஆட்சியில் ரூ.849/- ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதித் தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 இலட்சமாக இருந்தது, தற்போதைய ஆட்சியில் ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிகிச்சை முறைகள் 1450 ஆக இருந்தது, தற்போதைய ஆட்சியில் 1513 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970, தற்போதைய ஆட்சியில் 1829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2, தற்போதைய ஆட்சிக் காலத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. அதேபோல் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெரிய அளவில் இன்னொரு சிறப்பான திட்டமும் உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் படி, 2021 டிசம்பர் திங்கள் 18 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களால் மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 1,81,860 பேர், இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடி ஆகும். இதில் அரசு மருத்துவமனைகளில் 237களிலும், தனியார் மருத்துவமனைகள் 455களிலும் ஒட்டு மொத்தமாக 692 மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கின்றது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின்  அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகங்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்” என்றார்.