மருத்துவருக்கு கத்திக்குத்து ஏன்?- அமைச்சர் மா.சு. விளக்கம்

 
மா.சு.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறையில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் பாலாஜி, இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவரை சந்திப்பதற்காக வந்த ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.  

முதல் தளத்தில் பணி மருத்துவரின் அறையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உதவியாளர் அறையை திறக்க முற்பட்ட போது அறை உள்புறம் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வந்த நபரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து சரமாரி அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அவரது தாய் பிரேமாவிற்கு கலைஞர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு  சிகிச்சை எடுத்துவந்ததும் தெரியவந்தது. 

மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் பிரேமா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். முற்றிய நிலையில்தான் அவரது தாய் அனுமதிக்கப்பட்டார். சிறந்த சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் ஏற்கனவே இதை மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் கத்தி வைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி விட்டார்” எனக் கூறினார்.